
கடந்த 12 வருடத்திற்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமகவின் 'சித்திரை முழு நிலவு மாநாடு' நாளை நடைபெற இருக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மாநாட்டிற்கு காவல்துறையும் நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை மாநாடு நடைபெற இருப்பதால் வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான தொண்டர்கள் வாகனங்களில் மாமல்லபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான அச்சரப்பாக்கம்-ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சரப்பாக்கம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காலையிலிருந்தே சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் மாலை நேரத்தில் மேலும் அதிகரித்தது. பாமக மாநாடு மட்டுமல்லாது விடுமுறை முடிந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கிப் படையெடுத்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.