தமிழகத்தில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19), முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இவ்விழாவில், முதல்வர் பேசியதாவது:
முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் பொதுமக்கள் பயனடைய முடியும். 234 தொகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் (ஆக. 19) செயல்படுத்தப்படும். பொதுமக்கள் அதிகாரிகளை தேடிச்சென்று மனு கொடுத்த நிலை மாறி, அதிகாரிகளே மக்களை தேடிச்சென்று மனு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர, பட்டா கேட்டு பலரும் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.
பொதுமக்கள் ஏற்கனவே வழங்கிய பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எடப்பாடியில் சரபங்கா நதியின் இரண்டு புறமும் சீர் செய்ய கோரிக்கை வைத்து இருந்தனர். இதை ஏற்று, இரண்டு கரையோரங்களும் சீரமைக்கப்படும். தமிழகத்தில் தொழில்வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் உபரிநீர் கொண்டு வந்து நிரப்பப்ப டும். குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன.
தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. இன்னும் மீதம் ஐந்து அடி உள்ளது. விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும். இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு - ஓமலூர் நான்குவழி சாலை:
இதையடுத்து கொங்கணாபுரத்தில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், ''எடப்பாடி பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சில பகுதிகள் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளும் விரைவில் சேர்க்கப்படும். புறவழிச்சாலை வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளதும், நிறைவேற்றப்படும். தவிர, திருச்செங்கோடு - ஓமலூர் செல்லும் சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.
ஓசூரில் சர்வதேச ஏல மையம் 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகள் பூக்களைக் கொண்டு வந்து விற்கலாம். தமிழகம் முழுவதும் கிராம சாலைகள் புதிய சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது,'' என்றார்.