திண்டுக்கல் மாநகரில் உள்ள மேட்டுப்பட்டியில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான புனித வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கா திருவிழா நடைபெற்று வருகிறது இந்நிலையில் உயிர்த்த ஆண்டவரின் திருத்தேர் பவனி நடைபெற்றது. தேர் பவனியை திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் மாநகர மேயர் இளம் ஜோதி பிரகாஷ், நகர்மன்ற துணைத்தலைவர் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திருவிழாவில் பங்கேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆகியோரும் வருகை தந்தனர்.
தேர்தல் நேரத்தில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு அங்குள்ள சேர்களில் அமர்ந்து ஒருவருக்கொருவர் அரசியலை மறந்து பேசிக்கொண்டும் இருந்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தனது இளைய மகன் சதீஷை அமைச்சர் ஐ.பி.யிடம் அறிமுகப்படுத்தியோடு மட்டுமல்லாமல் காலில் விழுந்து ஆசிவாங்க சொன்னார். உடனே சதீஷும் ஐ.பி. காலில் விழுந்து ஆசி வாங்கினார். அதனையடுத்து அமைச்சர் ஐ.பி.பெரியசாமி வியாகுல அன்னைக்கு மரியாதை செலுத்தினார். இந்த பாராளுமன்ற தேர்தலை ஒட்டி திண்டுக்கல்லில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது கவனத்தைப் பெற்றுள்ளது.