மசாலா பொருள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பெரும் விழா நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்தி தேவி அறக்கட்டளையின் 23வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது.
விழாவினை சாந்தி துரைசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி வரவேற்றார். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது வாழ்வில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக இந்திய புலனாய்வு துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் கார்த்திகேயன், சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சக்திதேவி அறக்கட்டளையின் தளிர் திட்டம் மூலம் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று சிறப்பாக பராமரித்து வளர்த்து வந்த தனிநபர்கள், நிறுவனங்களுக்கு மரங்களின் காவலர் விருது மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரை வெளியிட்டும், கல்வி ஊக்கத்தொகை , சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினார்.
முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டாக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டு, சக்தி முதியோர் நலம் மற்றும் பக்கவாத பிசியோதெரபி பயிற்சி மைய கல்வெட்டை திறந்து வைத்து பேசும் போது, "குறைபாடு உள்ளவர்களை நாம் அனுதாபத்துடன் கவனித்து மதிக்க வேண்டும். மாசில்லாத மன ஆரோக்கியமான மனம். நோயில்லாமல் வாழ்வது மட்டுமே ஆரோக்கியம் ஆகிவிடாது. செல்வம் பொருள் சம்பாதிப்பது மட்டுமே செல்வம் ஆகாது. ஏற்றத்தாழ்வு உள்ளது மட்டுமே வாழ்க்கை, ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்' என்றார்.
பெங்களூரு வாசவி மருத்துவமனை கௌரவச் செயலர் ஸ்ரீராமுலு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சேவை அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பேசினார். அரிமா சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா முத்துசாமி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்கள். விழாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி உதவித்தொகை என ஒரு கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் சக்தி மசாலா செந்தில்குமார், தீபாசெந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.