சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக அதிகாலையில் பனியின் தாக்கமானது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் பனிப்பொழிவு சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வெப்பநிலையின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (08.02.2025) அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் பனிமூட்டம் காரணமாகத் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் விரைவு ரயில்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர்.
ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்துள்ளனர். மேலும் சென்னை விமான நிலையத்திலும் விமானங்கள் தரையிறங்க முடியாத அளவிற்குப் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் வானத்தில் வட்டமடித்தபடி உள்ளன.