நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட நிலையில் அதனைக் கண்டித்து அக்கட்சியினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாருக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் காமேஸ்வரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் பாலசெல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 62 அடி உயரக் கொடிக்கம்பத்தை நட்டுவைத்து கொடியேற்ற முயன்றனர். அப்பொழுது கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து கொடிக் கம்பம் நடுவதற்கு அனுமதி வாங்கவில்லை எனவே கொடியேற்ற அனுமதி இல்லை என தெரிவித்து கம்பத்தை அகற்றினர்.
அப்பொழுது ஏற்பட்ட தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இரவில் கைது செய்யப்பட்ட 9 பேரும் அதிகாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் ஒருதலைபட்சமாக அதிகாரிகள் செயல்பட்டதாகக் கூறி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசிகவினர் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக நாகை மற்றும் திருவாரூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுடன் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போராட்டத்தில் திடீரென விசிகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.