Skip to main content

இலங்கை கடற்படைக்கு முதல்வர் கண்டனம்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

fishermans incident pudukkottai district cm announced relief funds

 

இலங்கை கடற்படைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18/01/2021 அன்று மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

 

இம்மீனவர்கள் 19/01/2021 அன்றே கரைக்குத் திரும்பி இருக்க வேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று அறிந்தவுடன், எனது உத்தரவின் பேரில் இந்திய கடலோரக் காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்து விட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.

 

இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு/ அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மேலும், இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து இந்தியத் தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்