
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாய்சக்தி தியேட்டர் அருகில் தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, இந்த வாரம் தொடக்கத்தில் சக்தி பட்டாசுக் கடை என்கிற பெயரில் கடை திறக்கப்பட்டு பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நவம்பர் 12 -ஆம் தேதி கடை திறக்கவந்த அதன் உரிமையாளர், கடையின் ஷட்டர் உடைந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும், கடையின் கல்லா பெட்டியில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளயைடித்துச் சென்றிருந்தனர். உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தார். அதன் பெயரில் போலீஸார் வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆம்பூர், வாணியம்பாடி வழியாகச் செல்லும் சென்னை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், இருசக்கர வாகனத்தில் பயணிப்போரிடம் தொடர்ச்சியாக செல்ஃபோன் கொள்ளை நடந்துவந்தது. அதற்கு முன்பு, வீடுகளில் கொள்ளையடித்து வந்தனர். தற்போது பட்டாசுக் கடையில் பட்டாசுகளைக் கொள்ளையடித்திருப்பது வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.