நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (05/02/2020) காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை அருகே பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' நேற்று (05/02/2020) பாதியிலேயே நிறுத்தப்பட நிலையில், இன்று மீண்டும் படப்பிடிப்பு நடக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், விஜய் இல்லாமல் என்.எல்.சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதேபோல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் ரூபாய் 50 கோடியையும், மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் இருந்து ரூபாய் 15 கோடி என கணக்கில் வராத ரூபாய் 65 கோடி ரூபாயை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.