வேலூரில் பிறந்து எட்டு நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தப்பியோடிய பெற்றோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள பொம்மன்குட்டை கிராமத்தில் பிறந்து எட்டு நாட்களே ஆன பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க முயன்ற பொழுது குழந்தையின் தாய் தந்தை தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அருகிலேயே புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை எடுத்த போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மீண்டும் குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்தனர். இதுகுறித்து விசாரிக்க வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தமிழரசன் தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்பு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தப்பியோடிய தம்பதியினரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று விடியற்காலை 5 மணி அளவில் அதே ஊரின் ஒரு பகுதியில் மறைந்திருந்த குழந்தையின் பெற்றோர் ஜீவா-டயானா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாமியார் பேபி என்பவரையும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஊராட்சி மன்ற செயலாளர் உமாபதி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் எருக்கஞ்செடி பாலை குழந்தைக்கு ஊற்றி குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே பெண் சிசுக்கொலை தொடர்பான உண்மை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.