Skip to main content

ரஜினிகாந்த் - ஞானவேல்... தொட்டதும் விட்டதும்! வேட்டையன் அலசல்!

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
   Rajinikanth - Gnanavel... Vettaiyan movie  analysis!

"அவனுகள எல்லாம் விடக்கூடாது, சுட்டுத் தள்ளணும்..." - ஒவ்வொரு கொடூரமான குற்றம், கொலை அல்லது பாலியல் வன்புணர்வு நடக்கும்போதும் ஒலிக்கும் சாதாரண குடிமகனின் குரல். இந்தக் குரல், போலீசுக்கு உத்வேகத்தை கொடுக்கும் குரல். சுட்டுத் தள்ளிடலாம்... சுடப்பட்டவன் குற்றவாளியே இல்லையென்றால் ? என்ன செய்ய முடியும்? என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட எல்லோரும் குற்றவாளிகளா?  என்கவுண்டர்கள் எல்லாமே உண்மையா? எப்போதும் விடைகிடைக்கா விடுகதை இது! வீரப்பன் மரணம் முதல் ராம்குமார் மரணம் வரை மர்மம்தான், கேள்விக்குறிதான். நக்கீரன் எப்போதும் இதை பேசி வருகிறது. இத்தகைய முக்கியமான பிரச்சனையை ஒரு மாஸ் ஹீரோ படம் பேசினால்? முன்பெல்லாம் பேச முடியாத இந்தப் பிரச்சனையை பேசியிருக்கிறது சூப்பர் ஸ்டார் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள 'வேட்டையன்'.  

'லாக்-அப் சித்ரவதைகளை வலி குறையாமல் நம் மனதுக்குக் கடத்தி அதற்கெதிரான சட்டப் போராட்டத்தின் மூலம் நம்பிக்கையும் கொடுத்தது ஞானவேலின் முந்தைய திரைப்படமான 'ஜெய் பீம்'. நீதியரசர் சந்துருவின் நிஜ வாழ்க்கைப் பயணம் அது. இப்போது இன்னும் பெரிய களத்தில் இன்னும் இரு பிரச்சனைகளை பேசியிருக்கிறார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானவை, கொண்டாட்டத்துக்கானவை என்று எடுத்துக்கொள்ளும் இயக்குனர்கள் ஒரு வகை. திரைப்படங்கள் கலைப்படைப்புகள் என்று செயல்படும் இயக்குனர்கள் ஒரு வகை. திரைப்படங்கள் சமூகத்திற்கான செய்தியை சுவாரசியமாக, பரவலாகக் கொண்டு சேர்க்கும் கருவிகள் என்று இயங்கும் இயக்குனர்கள் ஒரு வகை. ஞானவேல், மூன்றாம் வகையில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கிறார்.

கன்னியாகுமரி எஸ்.பி. அதியன் (ரஜினிகாந்த்) இந்தியா முழுவதும் காவல்துறையினர் அறிந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். ரவுடிகளை வேட்டையாடுவதில் வல்லவரான அவரை வேட்டையன் என்றே அழைக்கிறார்கள். தேசிய அளவில் இத்தகைய என்கவுண்டர்களை கடுமையாக எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் சத்யதேவ் (அமிதாப்). இன்னொரு பக்கம் சமூக அக்கறையும் செயல்பாடுகளும் கொண்ட தைரியமான பெண், ஆசிரியர் சரண்யா (துஷாரா விஜயன்). அவர் திடீரென பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட, விசாரணை தொடங்குகிறது. ஊரே, 'இப்படி பண்ணுனவன சும்மா விடக்கூடாது' என்று கொந்தளிக்க, களமிறக்கப்படுகிறார் வேட்டையன். 'வேட்டையனின் வேட்டை எங்கு சென்று முடிந்தது... இரையானது யார்? சத்யதேவின் எதிர்வினை என்ன?' என்பதுதான் படத்தின் கதை. 

முன்பெல்லாம் ரஜினி படத்தை இயக்கவேண்டுமென்றால் அவர் அதற்கு முன்பு பல கமர்சியல் வெற்றிகள் கொடுத்த இயக்குனர்களை அழைப்பார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஓரிரு படங்கள் என்றாலும் அழுத்தமாகத் தடம் பதித்த இயக்குனர்களை அழைத்து அவர்களுடன் பயணிக்கிறார். இந்த வரிசை பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என ஞானவேல் வரை நீள்கிறது. இதில் பா.ரஞ்சித், ஞானவேல் இருவரும் வேறு வகை. இவர்கள் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் படம் எழுதுபவர்கள், இயக்குபவர்கள் அல்ல. அதிலும் 'ஜெய் பீம்' எடுத்த ஞானவேல் எப்படி ரஜினிகாந்த்துக்குப் பொருந்துவார் என்பதே இப்படத்தின் அறிவிப்பு குறித்த எல்லோரது 'ஃபர்ஸ்ட் ரியாக்ஷனாக' இருந்தது. ஆனாலும் தன் படங்களுக்குக் கிடைக்கும் 'மாஸ்' கவனத்தின் மூலம் மக்களுக்கான கருத்தையும் சொல்லிவிடலாம் என்று யோசித்த சூப்பர் ஸ்டாருக்கும் அவர் அழைத்துவிட்டார் என்பதால் தனது பாணியை அப்படியே விட்டுவிட்டுப் போகாமல் அழுத்தமான களத்தை தேர்வு செய்து அதில் சூப்பர் ஸ்டாரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களையும் முடிந்த அளவு நெருடல் வராமல் சேர்த்து வெற்றிகரமாகக் கொடுத்த இயக்குனருக்கும் லைக், கமெண்ட் எல்லாமே போடலாம்.   

   Rajinikanth - Gnanavel... Vettaiyan movie  analysis!

ட்ரெயிலர் வந்தபோது முழுக்க முழுக்க என்கவுண்டரை ஆதரிக்கும் படம் போன்ற பிம்பத்தைக் கொடுத்து ரசிகர்களை 'டீஸ்' செய்த ஞானவேல், படத்தில் தனது பார்வையில் சரியான நிலைப்பாடு எது என்பதை சரியான வாதங்களுடன் மக்களுக்கு சொல்லியிருக்கிறார். படம் பேசும் இன்னொரு முக்கிய பிரச்சனை 'நீட்'. 'நீட்' தேர்வே தேவையில்லை என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படி இருக்க நீட் தேர்வின் பெயரில் களமிறங்கியுள்ள பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையையும் அந்த வியாபாரப் போட்டி முத்தும்போது நடக்கும் விபரீதங்களையும் எப்படி ஏற்க முடியும்? அந்த விபரீதங்களையும் வியாபாரத்துக்காக நிறுவனங்கள் செல்லும் எல்லைகளையும் எடுத்துக் கூறியிருக்கிறது 'வேட்டையன்'.

முன்பு தமிழகத்தில் பொறியியல் - மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைமுறையில் இருந்தபோது, ஊருக்கு ஊர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன. ஈரோடு - நாமக்கல் பகுதிகளில் பெரிய ராட்சச பயிற்சி நிறுவனங்கள் இருந்தன. பொதுவாகவே கல்வி வணிகமாகிவிட்ட நிலையில் இத்தகைய நுழைவுத் தேர்வுகள் அந்த வியாபாரத்தை இன்னும் தீவிரமாக்கி மாணவர்களுக்குப் பெரும் தடையையும் அழுத்தத்தையும் தந்தன. பிறகு, 2006ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் அந்த நுழைவுத் தேர்வுகள் நீக்கப்பட்டன. எந்தப் படிப்புக்கும் எந்த வேலைவாய்ப்புக்கும் நுழைவுத் தேர்வுகள் கூடாது என்பதல்ல நாம் சொல்ல வருவது. ஆனால், நுழைவுத் தேர்வுகள் ஒவ்வொன்றுக்குமான தேவை ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டும். பங்கேற்கும் மாணவர்களின் பாடத்திட்டம், அவர்களின் பின்புலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒரு உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு வைக்கிறோம் என்றால், அந்தத் தேர்வின் மூலமாக நிராகரிக்கப்படும் மாணவர்கள் உண்மையிலேயே அக்கல்வி கற்கும் திறனற்றவர்களா? ஒரு சாராருக்கு வழியை எளிதாக்க மற்றவர்கள் அனைவருக்கும் வழியை அடைக்கக்கூடாது. கல்வி சமத்துவத்தை தர வேண்டும், சம வாய்ப்புகளை தர வேண்டும். நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்குப் பாரபட்சத்தையும் அநீதியையும் தருகின்றன. இந்தக் கடுமையான சூழலில் கல்விதான் தாங்கள் முன்னேற ஒரே வழியென்று வாழும் பெரும் மக்கள்தொகை, கல்வி வியாபாரிகளிடம் சிக்கி சிரமப்படுகிறார்கள். பலர் தங்கள் வாழ்வின் சேமிப்பை இழக்கிறார்கள். இவ்வளவு அடர்த்தியான சமூக கருத்துகளை ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் அயர்ச்சி ஏற்படுத்தாத வகையில் கலந்து எழுதியுள்ளார் ஞானவேல். 

சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், போகும் போக்கில் ஒன் லைன் சுவாரசிய ட்வீட் போல சிரித்து ரசிக்க வைக்கும் ஃபகத் ஃபாசில், 'மனசிலாயோ', மஞ்சு வாரியர், சண்டைக் காட்சிகளுடன் இத்தனை ஸீரியஸ் விஷயங்களையும் கலந்திருப்பது ரசிகர்களுக்குக் கொஞ்சம் புதுசுதான். அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அதற்கு வழியமைத்துத் தந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அமிதாப் பச்சன், ஃபகத், ராணா, மஞ்சு வாரியர், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் என மெகா கூட்டணியை சாத்தியமாக்கி வேட்டையனின் வீச்சை மிகப் பெரியதாக்கி இருக்கிறது சுபாஸ்கரன் - G.K.M.தமிழ்குமரன் லைகா கூட்டணி.       

இயக்குனரது பத்திரிகை பின்புலன் மற்றும் சட்டம் மீதான ஆர்வம் களத்தில் நடக்கும் உண்மைகளை விரிவாகவும் சுவாரசியமாகவும் தகவல்களோடும் தர உதவியிருக்கிறது. மக்கள் மேலோட்டமாகப் பார்க்கும் செய்திகள், விஷயங்களில் அடுத்த அடுக்குகள் எப்படியிருக்கின்றன என்பதையும் ஆங்காங்கே சொல்லியிருக்கிறது படம். ஞானவேல் குறித்து நம்மிடம் பகிர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா, "இந்தியாவின் பெரிய ஜாம்பவான்களை இயக்கும் ஆற்றலை அந்த அமைதியான தோற்றத்துக்குள் வைத்திருக்கிறார் ஞானவேல். அவருக்கு நீதிமன்றம் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் பெரும் நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது. அதுவே அவரது படங்களில் வெளிப்படுகிறது. சட்டம் படிக்கும் ஆர்வமும் அவருக்கு இருக்கிறது. அது குறித்து நிறைய கேட்டார். சட்டம் பயிலும் முன்பே சாதாரண மக்களுக்கு சட்டம் எத்தகைய பாதுகாப்பு என்பதை தனது படங்களில் அழுத்தமாகக் கூறியுள்ளார்" என்று கூறினார். இயக்குனர் ஞானவேல் தனக்கு அளித்த 'ஜெய் பீம்' படத்தின் உரையாடல் புத்தகத்தை, சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது அவருக்கு அளித்துள்ளார் வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா. அந்தப் புத்தகத்தை பெற்றுக்கொண்ட முதல்வர் மகிழ்ந்தாராம்.

   Rajinikanth - Gnanavel... Vettaiyan movie  analysis!

'போனா போகுது ஒரு பொம்பளையின்னு பார்த்தா...', 'பொம்பளைன்னா....', 'நீ ஒரு பொம்பளை...' இப்படிப்பட்ட பாடல் வரிகளை, வசனங்களை முன்பெல்லாம் தமிழ் படங்களில் மிக எளிதாகக் காண முடியும். 'குப்பத்து பசங்க இப்படித்தான்...' போன்ற பேச்சுகளையும் திருநங்கைகள் குறித்த ஆபாசமான, கிண்டலான காட்சியமைப்புகளையும் எந்த நெருடலும் இல்லாமல் கடந்திருக்கிறோம். ஆனால் இன்று எந்த ஒரு சமூகப் பிரிவையும் பொதுப்படுத்தி இத்தகைய காட்சிகளை, வசனங்களை, வரிகளை வைக்க முடியாது என்பதே அரசியல் - சமூக செயல்பாட்டாளர்கள், சில பொறுப்பான இயக்குனர்கள், பக்குவமான ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய இந்த வட்டத்தினால் சாத்தியமானது. அத்தகைய இயக்குனர்களில் ஒருவராக ஞானவேல் இருக்கிறார். தமிழ் சினிமா வந்திருக்கும் இந்த தூரம் நம்மை மகிழ்விக்கிறது.