வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார். தற்போது வங்கதேசத்தில் வன்முறைகள் குறைந்திருந்தாலும், அநேக இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து நவம்பர் 18 ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முன், தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையி, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என நேற்று வங்கதேச அதிகர் முகமது ஷஹாபுதீன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியதாவது, “வங்கதேசத்தில் இருந்து இந்தியா தப்பிச் செல்வதற்கு முன் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் என்னிடம் இல்லை. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எந்த ஆவணங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஷேக் ஹசீனா இந்தியா தப்பிச் சென்ற நாளான ஆகஸ்ட் 5 காலை 10:30 மணியளவில் ஹசீனாவின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. ஹசீனா என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதைக் கேட்டதும், இங்கு ஏற்பாடுகள் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள், மற்றொரு அழைப்பில் அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எல்லா இடங்களிலும் அமைதியின்மை பற்றிய செய்திகள் வந்தன. நான் எனது இராணுவச் செயலாளரான ஜெனரல் அடிலிடம், அதை ஆராயும்படி சொன்னேன்.. அவருக்கும் எந்த தகவலும் இல்லை. நாங்கள் காத்திருந்து டிவியில் வரும் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கும் செய்தி இல்லை. ஒரு கட்டத்தில், ஹசீனா எனக்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர் இங்கு வந்தபோது, பிரதமர் ராஜினாமா செய்தாரா என்பதை அறிய முயற்சித்தேன். அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வந்ததே தவிர முறைப்படி கடிதம் மூலம் எங்களுக்குத் தெரிவிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. எல்லாம் கட்டுக்குள் வந்த நிலையில், ஒருநாள் ராஜினாமா கடிதத்தின் நகலை எடுக்க அமைச்சரவைச் செயலர் வந்தார். நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். இனிமேல் இதை விவாதிப்பதில் அர்த்தமில்லை என்றார். ஹசீனா வெளியேறிவிட்டார், அதுதான் உண்மை. இன்னும், இந்த கேள்வி மீண்டும் எழக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, நான் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்டேன். இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், உருவாகும் சூழ்நிலையில், அரசியல் சாசன வெற்றிடத்தை நீக்கி, சுமூகமான நிர்வாக செயல்பாடுகளை எளிதாக்க இடைக்கால அரசு அமைக்கலாம் என்று கூறியது. அதன் அடிப்படையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது” என்று கூறினார்.
இதற்கிடையில், சட்ட ஆலோசகர் டாக்டர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், “கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று அதிபர் கூறினால், இது ஒரு வகையான சுய முரண்பாடாகும். ஆகஸ்ட் 5 ஆம் தேதியின் போதே ஹசீனாவின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாகவும் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அதிபரே தனது உரையில் குறிப்பிட்டார். இது அவரது சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.