தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடை எடுப்பதற்காக கடைத்தெருக்களில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தி.நகரில் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க வருவோர் கூட்டத்தை சமாளிக்க பல்வேறு பாதுகாப்புப் பணிகளை சென்னை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், 'ரங்கநாதன் தெருவைச் சுற்றிலும் 66 கேமராக்கள், ஏழு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போவது தடுக்க கைகளின் டேக் போடப்படுகிறது. சென்னை மாநகரம் ஒருங்கிணைந்த மாநகரமாக இருந்த பொழுது தீபாவளி பண்டிகைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கு தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பேருந்து நிலையம் அமைப்போம். தற்போது தாம்பரம் தனி காவல் ஆணையராகம் ஆகிவிட்டது. அதனால் சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய கோயம்பேட்டில் நெரிசல் அளவு குறைந்துள்ளது. அதேபோல சென்னை வெளிப்பகுதியான கிளம்பாக்கம், தாம்பரம், மாதவரம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.