மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஆண்டு, திறந்தவெளியில் இறைச்சிக் கடைகளை நடத்துவதற்கும், வழிப்பாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கடந்த வாரம் நடந்த தசரா பண்டிகையில் துர்கா சிலையை கரைக்கும் போது ஒலிபெருக்கியில் டிஜே இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு, பெருமளவி ஒலியே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்ததாவது, ‘மசூதிகளில் ஒலி எழுப்பும் சத்தம் மக்களைத் தொந்தரவு செய்யும் போது மசூதிகளுக்கு முன்னால், டிஜே இசைப்பதில் ஏன் சிக்கல் இருக்க வேண்டும் என்பதுதான் வாதம். முஸ்லீம்கள் கொஞ்சம் புத்திசாலித்தனம் காட்டி டிஜேக்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். கடவுள் எப்படியும் அதைக் கேட்பார், ஏனென்றால் அவர் காது கேளாதவர்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரியான ஷைல்பாலா மார்ட்டின், ‘கோவில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள், பல தெருக்களில் உள்ள ஸ்பீக்கர்கள் மூலம், ஒலி மாசுவை பரப்பி நள்ளிரவு வரை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை’ என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.