திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபிக்கண்ணன் என்பவர் வீட்டில் தையல் கடை வைத்து டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யோகேஸ்வரி நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5ம் வகுப்பு படிக்கும் 10 வயதான கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு கோபிக்கண்ணனின் மனைவியான செவிலியர் யோகேஸ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகனும் வீட்டில் இருக்கும் இரும்புக் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலில் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் கட்டிலுக்கு மேலே இருக்கும் இரும்புக் கம்பி அவர்களது தலையின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே கோபிக்கண்ணன் உயிரிழந்தார். அவருடைய மகன் கார்த்திக் உயிருக்குப் போராடி கொண்டிருந்ததைக் கண்டு உறவினர்கள் அருகே உள்ள கொசவபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் கூட போகும் வழியிலே கார்த்திக்கும் உயிரிழந்தார்.
இதுசம்மந்தமாக சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த தந்தையும், மகனும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.