![Milk purchase issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/hg1A6AsefGlifxmEMfndvT36TfQITxGAF2fE_50daBA/1594951940/sites/default/files/inline-images/450_24.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது வீ.கூட்ரோடு. இங்கு தனியாருக்குச் சொந்தமான பால்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பால் பண்ணைக்கு கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து தினசரி பாலை கொள்முதல் செய்து இங்கு கொண்டு வருகின்றனர்.
கொள்முதல் செய்யப்படும் அந்தப் பாலுக்கு உண்டான பணத்தை மாதம் மூன்று முறை வழங்கி வருவதாகவும் இதனால் பால் பண்ணைக்குத் தினசரி சுமார் இரண்டு லட்சம் லிட்டர் பால் வரத்து தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பால் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென பால் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தப் பண்ணைக்கு பால் உற்பத்தி செய்து கொண்டு வந்த விவசாயிகளின் இரண்டு லட்சம் லிட்டர் பால் வீணானது. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோஷமிட்டனர். செம்பளா குறிச்சி கைகாட்டி அருகே சுமார் 100 லிட்டர் பாலை கீழே கொட்டி போராட்டம் செய்தனர்.
இதையடுத்து கீழ்குப்பம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சாமிநாதன் உள்ளிட்ட போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கை பற்றி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர். அதேபோல் சின்னசேலம் அருகே கனியாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலை தொடர்ந்து கொள்முதல் செய்யக்கோரி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பால் கொள்முதல் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர். சின்னசேலம் பகுதியில் பால் கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.