சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால்கள் தூர் வாராததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்றும் தூர் வாரும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ளது சி.அரசூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள தட்சன்தெரு பாசன வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால் ஊருக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்ததாக கூறி இக்கிராம விவசாயிகள், பொதுமக்கள் இன்று சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் கையில் மனுக்களுடன், அலுவலகத்தின் வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்,
சிதம்பரம் சுற்று வட்டார இடங்களில் கடைமடை வரை பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் பல ஊர்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், பெரும்பாலான வாய்க்கால்கள் இன்னும் தூர் வாரப்படவில்லை என்றும், இதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், அனைத்து பாசன வாய்க்கால்களையும் விரைவில் தூர் வாரி தண்ணீர் திறக்காவிட்டால், ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போராட்டத்தில் விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.