கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த எ.சித்தூரில் ஆருரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்கவில்லை. மேலும் விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடனை விவசாயிகள் செலுத்தவும் வங்கிகள் நிர்பந்தப்படுத்துகின்றன.
இதையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் நிறுவன ஆலையை திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எங்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து ஆலையை வாங்கிய தனியார் நிறுவனம் தொழிற்சாலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதும் வழங்கிய பின்புதான், ஆலையை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வேப்பூரிலிருந்து நடைபயணமாக ஆலைக்கு சென்று உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனால் கடலூர் எஸ்.பி சக்தி கணேஷ் தலைமையில் வேப்பூர் பஸ் நிலையம், வேப்பூர் கூட்டு ரோடு, ஏ.சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலை வாயில் என போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலர் சக்திவேல் தலைமையில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேப்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனையறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேஷ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
அதில் முக்கிய நிர்வாகிகளிடம் ஆட்சியர் பழனி ஆலோசனை மேற்கொண்டார். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறியதால் விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். திருமண மண்டபத்தின் முன்பாக ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.