![farmer was beaten to passed away by an AIADMK leader](http://image.nakkheeran.in/cdn/farfuture/cZMfVYa8Pv_jCZaoY51CvSgyRZo54f4fb_JH3SyeHa8/1683877395/sites/default/files/inline-images/1003_13.jpg)
மணல் அள்ளியதை தடுத்து நிறுத்திய விவசாயியை அதிமுக பிரமுகர் அடித்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள பெருந்தோட்டம் கோடாலி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 60 வயதான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும், தனது வீட்டின் பின்புறம் உள்ள திடலில் செங்கல் சூளை ஒன்றை நடத்திவந்து அதில் வரும் பணத்தில் தனது குடும்பத்தை பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெருந்தோட்டம் ஊராட்சித் துணைத் தலைவராக இருப்பவர் பாஸ்கரன். அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் விவசாயி ராஜேந்திரனுக்கு சொந்தமான செங்கல் சூளையில் மண் எடுப்பதற்காக அவரிடம் 40 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். ஆனால், பாஸ்கரன் கடந்த சில நாட்களாக அந்த மண்ணுக்கான முழு தொகையை கொடுக்காமல் தொடர்ந்து மண் எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரனுக்கும் பாஸ்கரனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த 9 ஆம் தேதி இரவு நேரத்தில் பாஸ்கரனின் ஆட்கள் மீண்டும் மண் எடுக்க வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், “நிறுத்துங்க.. நிறுத்துங்க.. பணம் கொடுக்காம எதுக்கு மண் எடுக்குறீங்க? மண்ணெல்லாம் கொடுக்க முடியாது. முதல்ல உங்க முதலாளிய வரச்சொல்லுங்க” என அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அந்த சமயம், அங்கிருந்த ராஜேந்திரனின் உறவினர்கள், சாதாரண வாய்த்தகராறு தான் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
![farmer was beaten to passed away by an AIADMK leader](http://image.nakkheeran.in/cdn/farfuture/67R3zhEdl5KVR5-un_6m-RxA0KAViXTMwseealhqytE/1683877422/sites/default/files/inline-images/th_4112.jpg)
அதன்பிறகு, இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாஸ்கரனின் ஆட்கள், அங்கிருந்த மண்வெட்டியால் ராஜேந்திரனின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கீழே விழுந்து அசைவற்று கிடந்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் பதட்டமடைந்த பாஸ்கரனின் ஆட்கள், இந்த சம்பவத்தை விபத்து போல் உருவகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த டிராக்டரை அவர் மீது ஏற்றி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
ராஜேந்திரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரை தேடிக்கொண்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது, ராஜேந்திரன் உடல் நசுங்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த ராஜேந்திரனின் உறவினர்கள், "இந்த கொலைக்கு பாஸ்கரும் அவரது ஆளுங்களும் தான் காரணம். அவங்கள உடனே கைது பண்ணுங்க" என கோஷம் போடத் தொடங்கியதால் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, போலீசார் விசாரணையில், ராஜேந்திரனை கொலை செய்தது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் ஓட்டுநர் பாலா ஆகிய இருவர் தான் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு, பாஸ்கரன் மற்றும் பாலா ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது சீர்காழி அருகே விவசாயியை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.