கோவை மாவட்டம், அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தால், நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அன்னுார் மற்றும் புளியம்பட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் தொழில் பூங்காவுக்கு என அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்கவோ, விற்கவோ, அடமானம் செய்யவோ முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த, 'நமது நிலம் நமதே' என்னும் விவசாய அமைப்பினர் எல்.கோவில் பாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, அதிகாரிகள்,'தொழில் பூங்கா அமைய உள்ள நிலங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்; தடை இல்லை' என தெரிவித்தனர். இருப்பினும், 'எந்தவித அரசாணையும் இல்லாமல் பத்திரப்பதிவுக்கு மூன்று நாள் தடை விதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..' என வலியுறுத்தி, அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் செல்வ பாலமுருகன், கையில் சில ஆவணங்களுடன் வந்து, “வதந்திகளை நம்பாதீர்கள். பத்திரப்பதிவு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு யாரோ தவறான தகவல்களை தந்துள்ளனர்.” என்றார்.
இதற்குப் பதிலளித்த விவசாயிகள், “நீங்கள் மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள். மக்களுடன் முதல்வர் கூட்டத்தில் கூட, பத்திரப்பதிவை நிறுத்தி வைக்கச் சொல்லியுள்ளதாக நீங்கள் கூறினீர்கள்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தார். அப்போது, குறுக்கிட்டுப் பேசிய விவசாயி சங்கத் தலைவர் குமார ரவிக்குமார், “ஜாக்கிரதை... எங்களை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது. கேட்பதற்கு முறையாகப் பதில் சொல்லுங்கள். காவல்துறையை மீறி எதுவும் நடக்காதா..? ஆன்லைனில் புகார் பதிவு செய்துவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வந்து நடவடிக்கை எடுப்போம். நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லை. அரசரும் இல்லை. நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நியமிக்கப்பட்டுள்ள அரசுப் பணியாள். எங்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டப்படி பணியாற்றாவிடில் உரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்..” என்று எச்சரித்தார்.
மேலும், விவசாயிகள் நிலத்தைக் கையகப்படுத்த மாட்டோம் என தெரிவித்து விட்டுக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலங்களில் பத்திரப்பதிவு செய்ய மாட்டோம் என்று அரசு அதிகாரி கூறுவதால், விவசாயிகள் படும் துயரங்களையும் விவசாயி சங்கத் தலைவர் குமார ரவிக்குமார் எடுத்துக்கூறினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே, அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்ட நிலையில், 'தொழில் பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்க, விற்க, அடமானம் செய்ய எந்த தடையும் இல்லை' என, உறுதி அளித்த பிறகு விவசாயிகள் கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது.