சென்னை, தாம்பரம், ஆவடி போன்ற பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் குற்றங்கள் செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது, அதிபயங்கர குற்றவாளிகளை என்கவுண்டர் நடவடிக்கை எடுப்பது என காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், போலீஸார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பிரபல ரவுடி ஒருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (34). இவர் மீது 5 கொலை வழக்குகள், 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி, அடிதடி போன்ற பல வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதம் பிரபாகரன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாக சோமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் லெனின் உள்பட 8 பேர் சம்பந்தப்பட்டதாக கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் ரவுடி லெனின் உள்பட 4 பேரையும் சோமங்கலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதையடுத்து, கடந்த 5 மாத காலமாக தலைமறைவாக இருந்த லெனினை போலீஸார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்த தகவலை அறிந்த லெனின் தன்னை என்கவுண்டர் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (01-11-23) சேலம் நடுவர் நீதிமன்றத்தில் ரவுடி லெனின் நேரில் வந்து சரண் அடைந்தார். அப்போது அவரை விசாரித்த நீதிமன்றத்திடம், ’தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், என்னை என்கவுண்டர் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக’ லெனின் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், லெனினை சேலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.