வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே தொண்டான்துளசி கிராமத்தில் வசித்து வருபவர் பத்மநாபன். இவர் வேலூர் மாவட்ட எருது விடும் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். இவர் போடி ரெட்டியார் பிளேபாய் என்கிற பெயரில் மஞ்சுவிரட்டு காளை வளர்த்து வந்தார். அந்தக் காளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர, கர்நாடகா பல்வேறு பகுதிகளில் நடக்கின்ற எருது விடும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளது.
அதன் வேகத்துக்கு யாராலும் ஈடுக்கொடுத்து ஓடவோ, அதனைத் தடுக்கவோ முடியாது. இதனால் எருதுவிடும் விழாக்களில் அதிவிரைவாக குறைந்த நேரத்தை கடந்து முதல் பரிசுகளைத் தட்டிச் செல்லும் பிளேபாய். இதனால் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு ரசிகர், ரசிகைகள் இருந்தனர். ஒவ்வொரு முறை அது பரிசு பெற்று வரும்போதும் அதனை இளைஞர்கள், கிராமத்தினர் கொண்டாட்டமாக வரவேற்பார்கள்.
ப்ளேபாய் எருதுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதற்கான சிகிச்சை வேலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் எருது காளை இன்று திடீரென உயிரிழந்தது. இதனைக்கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்தக் கிராம மக்கள் மட்டும்மல்லாமல் எருது விடும் நிகழ்ச்சிகளின் ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எருது உரிமையாளர்கள் திரண்டுவந்து இறந்த ப்ளேபாய்க்கு மாலை அணிவித்து இறுதி மரியாதையாக அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வானது வேலூர் மாவட்டத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
மாட்டின் உரிமையாளர் போடி ரெட்டியார் தன் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தது போல் அழுதவர், மேளதாளங்களுடன் ஊர்வலமாக ப்ளேபாயை எடுத்துச் சென்று தங்கள் ஊர் இடுகாட்டில் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்யவைத்தார். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு எப்படி சடங்கு செய்து இறுதி மரியாதை செலுத்துவார்களோ அதே போன்று தான் வளர்த்த மாட்டிற்கு மரியாதை செய்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.