Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு: அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு கல்தா! பா.மோகன் நியமித்து உத்தரவு!!

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இதுவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த கருணாநிதியை நீக்கிவிட்டு, புதிய சிறப்பு வழக்கறிஞராக பவானி பா.மோகனை நியமித்து தமிழக உள்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

ba


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொல்லப்பட்டார். அவரை சாதிய ரீதியில் ஆணவக்கொலை செய்ததாக, சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 காவல்துறையினர் கைது செய்தனர்.


இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. முதன்முதலில் இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக கோவையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு சாட்சியிடம்கூட விசாரணை நடத்தாத நிலையில், திடீரென்று அவராகவே ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, அரசு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே, கொலையுண்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பா.மோகனை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

go


மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக பா.மோகனை நியமிக்கலாம் என்றும், அதற்குரிய உத்தரவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்குவார் என்றும் கடந்த 12.11.2018ல் உத்தரவிட்டது. அதையடுத்து 10.12.2018ல், நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம், பா.மோகனை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் தரப்பில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கருணாநிதியுடன், பா.மோகனும் இணைந்து சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடத்தி வந்தார். அவருடைய வருகை, அரசுத்தரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.


இது ஒருபுறம் இருக்க, உள்துறையிடம் இருந்து முறையான உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞராக பா.மோகன் ஆஜராகக்கூடாது என்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் அதிருப்தி தெரிவித்தார். 


இந்நிலையில், இதுவரை கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்புக்காக ஆஜராகி வந்த வழக்கறிஞர் கருணாநிதியை திடீரென்று நீக்கிவிட்டு, இனி இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பா.மோகன் பணியாற்றுவார் என்று உள்துறை முறையான உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 19.2.2019ல் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இதனால், கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்