கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ளது இறையூர். இங்குள்ள ஒரு வீட்டில் போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சக போலீசார் முருகேசன் நகரில் உள்ள ஷாஜஹான் என்பவரது வீட்டிற்க்கு சென்று திடீர் சோதனை செய்தனர்.
அப்போது ராயல்ஸ் என்ற பெயரில் கேரளா டெஸ்ட் டீகோல்டுகப் டீ அசாம் டீசன் டீ இரட்டை கிளி டீ இப்படி பலவகையான கலப்பட அரை கிலோ கொண்ட 14 போலி டீத்தூள் பாக்கெட் மூட்டைகளும் பாரிஸ் என்ற பெயரில் ரூபாய் 450 மதிப்புள்ள 125 போலி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். போலீஸார் சம்பவத்தின்போது விருத்தாச்சலம் டிஎஸ்பி இளங்கோவன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போலி டீத்தூள் சிகரெட் பெட்டிகள் பதுக்கி வைத்திருந்த ஷாஜகான் என்பவரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து நல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து அவர்களிடம் பறிமுதல் செய்த போலி டீ தூள் சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் ஷாஜகானிடம் போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் எங்கிருந்து வரவழைக்கப்பட்டன. அதை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர். கலப்பட டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். போலி டீத்தூள் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.