நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, 15 நாள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் அவர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திமோடியையும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் கடுமையாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து, காங்கிரஸ் பேச்சாளர் நெல்லைகண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதன்பின்னர் நெல்லை கண்ணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இன்று காலை நெல்லை அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், அவரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நெல்லை கண்ணனை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரினர். அதே நேரத்தில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நெல்லை கண்ணன் தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பாபு, நெல்லை கண்ணனை வரும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மதியம் 2 மணி அளவில் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் நெல்லை கண்ணன். ஆனால், சில நிர்வாக காரணங்களினால் அச்சிறையில் அவரை அடைக்க முடியாத காரணத்தினால் அவரை சேலம் சிறைக்கு மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெல்லை கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.