சேலம் அருகே, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த முன்னாள் வங்கி ஊழியர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பெருமான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் நாகராஜ் (35). இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது 30 லட்சம் ரூபாய் கையாடல் செய்த புகாரின் பேரில் அவர் மீது ஓமலூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிறை சென்று வெளியே வந்த அவர், தனது வீட்டிலேயே ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் நாகராஜின் மனைவி சத்யா, அவருடைய சகோதரி கோகிலா ஆகியோரை பெயரளவுக்கு பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார்.
இதையடுத்து அவர், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய தளங்களில் பல குழுக்களைத் தொடங்கி, சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மக்களிடம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி விளம்பரம் செய்து வந்துள்ளார். அதிக வட்டி, குறுகிய காலத்தில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க விரும்பிய ஏராளமான முதலீட்டாளர்கள் நாகராஜின் நிறுவனத்தில் பணத்தைக் கொட்டினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கொடுத்துள்ளார். இந்த தகவல் பரவியதை அடுத்து, சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டியை 1 முதல் 15ம் தேதிக்குள் மூன்று தவணைகளில் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிப். 1ம் தேதி முதல் முதலீட்டாளர்களுக்கு வட்டித்தொகை செலுத்தப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் அவரை அலைபேசியிலும், நேரிலும் சென்று விசாரித்துள்ளனர். பல தரப்பில் இருந்தும் பணத்தைக் கேட்டு நெருக்கடி முற்றியதை அடுத்து நாகராஜ் தனது அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே, நாகராஜின் சகோதரி கோகிலா, நாகராஜ், அவருடைய மனைவி சத்யா, தாய் மணி, நாகராஜின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் காணாமல் போனதாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் நாகராஜைத் தேடி அவருடைய வீட்டுக்கு குவியத் தொடங்கியுள்ளனர். முதலீட்டாளர்களில் பலர், வேறு நபர்களிடம் இருந்து பணத்தை கமிஷன் அடிப்படையில் முதலீடாகப் பெற்றுக் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தபோது, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை நாகராஜ் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறினர். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெருக்கடிக்கு பயந்து நாகராஜ் தலைமறைவாகி விட்டாரா அல்லது உண்மையிலேயே அவர் மாயமாகி விட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சீட்டு நிறுவனம், இரட்டிப்பு லாபம், பங்குச்சந்தையில் பணம் குவிக்கலாம் என்ற பெயரில் பல நிறுவனங்கள் தினுசு தினுசாக மக்களிடம் கொள்ளை அடித்துவிட்டு கம்பி நீட்டி வரும் எத்தனையோ சம்பவங்கள் அம்பலமானாலும், குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்கும் பேராசைக்காரர்கள் ஏமாறும் சம்பவமும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.