சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவமனையின் 12-வது வார்டில் உள்ள நோயாளிக்கு உள்ள கட்டில் மெத்தையில் நாய் உறங்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தேரசனிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட நாய்கள் படித்திருந்த வார்டு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. அந்த வார்டை கட்டிலை வைத்து அடைத்து அங்குயாரும் செல்லாதவகையில் வைத்து இருந்தோம். இரவு மற்றும் பகல் நேரத்தில் நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் அங்கே சென்று படுப்பது, ஓய்வு எடுப்பது அதே இடத்தில் சாப்பிட்டு விட்டு உணவு பொட்டலங்களை போட்டு விடுகிறார்கள். இதனால் நாய்கள் அந்த வார்டுக்கு வந்து இருக்கலாம்.
பயன்படுத்தப்படாத வார்டு என்பதால் ஊழியர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. தற்போது அந்த வார்டில் பைப்பு அடைப்பு, கட்டில் மெத்தைகள் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்து ஒரே வார்டில் இருந்தவர்களை இரு வார்டுகளாக பிரித்து அந்த வார்டு நடைமுறைக்கு வந்துள்ளது. தடைசெய்யப்பட்ட வார்டுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியும் சிலர் செய்த தவறான செயல்பாட்டால் இதுபோல் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.