Skip to main content

கரக்ஷன், கமிஷன், கலெக்ஷன் மட்டுமே எடப்பாடி ஆட்சி ... - ஈரோட்டில் மு.க.ஸ்டாலின்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
se

 

கரூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி  சுமார் 32,000 பேர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சி நேற்று மாலை கரூரில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து ஈரோட்டில் அதிமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ்குமார் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி சுமார் 3000 பேர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் ஈரோடு வந்திருந்தார். நேற்று இரவு எட்டு மணி அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பா.ம.க. என பல்வேறு கட்சியிலிருந்தும் விலகி திமுகவில் 3000 பேர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்கள். 

 

இந்நிகழ்வில்  கலந்துகொண்டு மு.க. ஸ்டாலின் பேசிய போது,  "தமிழக மக்கள் திமுகவின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் நடக்கிற எடப்பாடி ஆட்சி கரக்ஷன், கமிஷன், கலெக்ஷன் என்ற ஒரே குறிக்கோளுடன் உள்ளது. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக மோடி ஆட்சியும் விரைவில் முடிவுக்கு வரும்.  தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்" என்றார் .

 

அடுத்து விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள்  அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற முக ஸ்டாலின் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.  "விவசாயிகள் தங்களை வருத்திக் கொண்டு இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடக்கிறதா? ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அதிகாரிகள் கூட விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.  விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுக்கும் " எனக் கூறினார்.  இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவை சென்று தங்கிய மு. க .ஸ்டாலின் இன்று காலை சென்னை புறப்பட்டுச் சென்றார்.

 

சார்ந்த செய்திகள்