ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. புயலின் முன் பகுதி கரையை தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே முழுமையாக புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பேருந்து; ரயில்; விமான சேவை என அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் இடங்கள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணி வரை மின்வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி அடுத்த காந்தி நகர், பட்டாபிராம், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதனால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநீர்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த பிறகு மின் விநியோகம் சீர் செய்யப்படும் என மின்வாரியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. கனமழை காரணமாக பொதுமக்கள் 1077, 0422-2306051-ல் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.