சேலம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் பணியாற்றும் 11 செவிலியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 26 செவிலியர்கள் தற்போது இரண்டாம் முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவமனை நிர்வாகம், யாருக்கும் தொற்று இல்லை என்று கூறி அவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.
வீடு திரும்பிய இரண்டாவது நாளில், அவர்களில் 2 செவிலியர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவில் சில குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதைகேட்ட அவ்விரு செவிலியர்களும் அதிர்ச்சி அடைந்தனர், கதறி அழுதனர்.
நோய்த்தொற்று இல்லை எனக்கூறியதையடுத்தே நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவர்கள், கணவன், குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சொல்லப்பட்டதால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 26 செவிலியர்களும் கடும் விரக்தி அடைந்தனர். தங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சமும் அடைந்துள்ளனர்.
மருத்துவமனை கரோனா ஆய்வுக்கூடத்தின் குளறுபடியால் அதிருப்தி அடைந்த செவிலியர்கள், ஜூலை 28- ஆம் தேதியன்று இரவு பணிக்கு செல்ல மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களிடம் மருத்துவமனை தரப்பில், தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. இனி இதுபோன்ற குளறுபடிகள் நடக்காது என்று வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தனர். அதன்பிறகே செவிலியர்கள் இரவுப்பணிக்கு சென்றனர்.
இது தொடர்பாக செவிலியர்கள் சிலர் நம்மிடம் பேசினர். ''இன்றைய நிலையில், கரோனா வார்டில் பணியாற்றுவது என்பதே கடும் சவால் நிறைந்தது. இந்நிலையில், நோய் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் குளறுபடி செய்வது எங்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. செவிலியர்களுக்கே இந்த நிலை என்றால், இங்கே நம்பிக்கையுடன் வரும் சாமானியர்களின் நிலை என்ன என்பது குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது,'' என்கிறார்கள் செவிலியர்கள்.