
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பிய கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில் ஆஜராவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கவும் படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று ஆஜராகியுள்ளனர்.
இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவினாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாய்க்கன் பாளையத்தைச் சார்ந்த கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவருக்கும் சென்னை அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதற்கான அஞ்சல் உறையில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இது, இதுவரை இல்லாத அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு புதிய நடைமுறையாக உள்ளது. அமலாக்கத்துறையின் இந்த இழிவான போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தைப் பறிப்பதற்கு முயற்சித்து வருகிற குணசேகரன் என்கிற பாஜக மாவட்ட பொறுப்பாளரின் தூண்டுதலில் இது நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஏழை சிறு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையினரையும், பாஜக பொறுப்பாளரையும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்திட வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.