தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை புதிய கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பாக விரைவில் கல்லூரிகள் திறக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, அதற்கான முன்னெடுப்புகளை விரைவாக செய்தார். இதன் காரணமாக அறநிலையத்துறை சார்பாக புதிய கல்லூரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். இந்நிலையில், அறநிலையத்துறை வசம் உள்ள நிதியில் கல்லூரி தொடங்கக் கூடாது என்று ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (15.11.2021) நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறையின் நிதியை எப்படி கல்லூரி தொடங்க பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் பல கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறி வழக்கை 5 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.