பெரியார் பல்கலைக்கழக பதிவாளரைப் பணி இடைநீக்கம் செய்யாததற்குப் பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தற்போது வரை அவருக்கு மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாகத் துணைவேந்தர் ஜெகன்நாதனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை கண்டிக்கிறோம். மிரட்டல் தொனியில் பதிலளிக்க முடியாது என்று பதில் கொடுத்த துணை வேந்தரைக் கண்டிக்கிறோம். ஒன்று தேர்தலில் நடத்துங்கள் அல்லது கூட்டத்தை நடத்துங்கள்'' எனத் தரையில் அமர்ந்து கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.