Skip to main content

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் - ஆட்சியர் ரோகிணி

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

சேலம் மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள் ஆகியவை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

seal


சேலம் மக்களவை தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் மொத்தம் 1,803 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 பேர். இவர்களில் ஆண்கள் 8,09,760. பெண்கள் 8,02,132. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 90 பேர். 
 


வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. நகரப்பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துவிட்ட வாக்காளர்களுக்கு மட்டும் கூப்பன்கள் கொடுக்கப்பட்டு, அவர்களும் வாக்களிக்கும் வரை காத்திருந்து வாக்குச்சாவடி ஊழியர்கள் வாக்குகளை பதிவு செய்து கொண்டனர்.
 


வாக்குப்பதிவு நாளன்று இரவு 9 மணியளவில் சேலம் தொகுதியில் பதிவான வாக்குகள் விகிதம் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி சேலம் மக்களவை தொகுதியில் மொத்தம் 77.39 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மறுநாள் (ஏப்ரல் 19) இறுதியான வாக்குப்பதிவு விகிதம் குறித்து அறிவித்தார். அதன்படி இத்தொகுதியில் 77.57 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு நாளன்று நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து இயந்திரங்களும் அம்மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மொத்தம் நான்கு அறைகளில் இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 
 


பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் கேட்டோம், ''வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், துணை ராணுவம், ஆயுதப்படை காவலர்கள், உள்ளூர் காவல்துறையினர் தலைமையில் மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம். அவர்கள் இரண்டாவது அடுக்கு வரை சென்று சிசிடிவி கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடலாம்'' என்றார் ஆட்சியர் ரோகிணி.
 


வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்