உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.