
அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் "இணையத்தில் இலையின் குரல்" என்ற தலைப்பில் திறமையாளர்களை கண்டறியும் நிகழ்வுக்கான மாதிரி நிகழ்வு மதுரையில் உள்ள எம்.ஆர்.சி. மஹாலில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் கே ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாவட்டச் செயலாளர்கள் ஜக்கையன், முருக்கோட்டை இராமர் மற்றும் கட்சியின் ஐ.டி.விங்க் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த, மாதிரி நிகழ்வில் சமூக ஊடகங்களில் திறமையானவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் Podcast, Debate, Quiz உள்ளிட்ட மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றன. பலரும் தொழில் நுட்பம் சார்ந்த தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். அதிமுக முன்னோடிகள் பங்கேற்று நடத்தப்பட்ட வட்ட மேஜை (Roundtable) கலந்துரையாடல், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், டிஜிட்டல் நேர்காணலில் கலந்துகொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, மண்டல வாரியாக சமூக ஊடகங்களில் செயல்படும் சிறந்த திறமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை அதிமுகவின் Digital Spokes person-களாக மாற்றும் புதிய திட்டத்தை கையிலெடுத்துள்ளது. இதற்காக, திறனறி போட்டிகள் மண்டல வாரியாக தொடர்ந்து நடத்தவும் அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி முடிவு செய்திருக்கிறது.