வாழப்பாடி அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட்டு விடும்படி பலமுறை கூறியும் கேட்காததால், மனைவியை வைத்தே அவருடைய ஆண் நண்பரை கணவர் தீர்த்துக்கட்டியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). விவசாயி. சொந்தமாக இரண்டு டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் வைத்து, வாடகைக்கு விட்டு வந்தார். இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவு, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.
இந்த நிலையில்தான், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் குப்புற படுத்த நிலையில், சதாசிவம் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய இரு கைகளும் பின்பக்கமாக கட்டிப்போடப்பட்டு இருந்தது. கை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் சதாசிவம் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). இவருடைய மனைவி பவித்ரா (24). இவருக்கும், கொலையுண்ட சதாசிவத்திற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.
இவர்களின் நெருக்கத்தை அரசல்புரசலாக தெரிந்து கொண்ட ரஞ்சித்குமார், இருவரும் உடனடியாக தொடர்பை விட்டுவிடும்படி எச்சரிக்கை செய்தார். ஒரு கட்டத்தில் பவித்ரா, குடும்பத்தின் நலன் மற்றும் கணவரின் மிரட்டலுக்கு அடிபணிந்து, சதாசிவத்தை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் சதாசிவம், ரஞ்சித்தின் மனைவியை சந்திப்பதை தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சதாசிவத்தை தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது உறவினரான குமார் (34) என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரஞ்சித்குமார், தனது மனைவியையே பகடைக் காயாக பயன்படுத்தினார். அதாவது, மனைவியை வைத்தே சதாசிவத்தை உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார் ரஞ்சித். அதை நம்பி ஆசையுடன் சதாசிவம் அர்த்த ராத்தியில் பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டுக்குள் ஒளிந்திருந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பர் குமாரும், அவரை மடக்கிப்பிடித்து கைகள் இரண்டையும் கயிறால் பின்பக்கமாக இறுக்கிக் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதன்பிறகு, அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வீட்டில் வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து அவர்கள் சடலத்தை அருகில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக ரஞ்சித்குமார், அவருடைய மனைவி பவித்ரா, நண்பர் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.