
சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தியுள்ளனர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்கும் செயலில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார் 4 கிலோமீட்டர் அளவிற்குச் சென்று வீட்டை அடைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்தி தாக்க முயன்றதாக கூறப்படும் இளைஞர்களின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கார்களின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். தாம்பரம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காரை ஓட்டி வந்த இளைஞர்களை பிடிப்பதற்கு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒருசில தினங்களில் குற்றவாளிகள் நெருங்கி விடுவோம் என கேளம்பாக்கம் துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.