“கதவு வச்ச வீடும், டிகிரி படிக்க உதவியும் கிடைத்தால் போதும் அண்ணா.. மனநலம் பாதிச்ச அம்மாவை காப்பாத்திடுவேன் -பள்ளி வயதில் பாரம் சுமக்கும் சிறுமி!!" என்ற தலைப்பில் செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை நக்கீரன் இணையத்தில் சிறப்பு செய்தியும், வீடியோவும் பதவிட்டிருந்தோம்.
இந்தச் செய்தியில் சிறுமி சத்தியா மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வரும் 'மக்கள்பாதை' ஒருங்கிணைப்பாளர்கள் மொபைல் எண்ணும் இணைத்திருந்தோம். செய்தி வெளியான சற்று நேரத்தில் தொடங்கி, அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களின் ஏராளமான அழைப்புகள் வந்து திணறடித்துவிட்டது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் சிறுமி சத்தியாவின் நிலை குறித்து சொன்னதோடு அரசு உதவிகள் கிடைக்க ஆவண செய்யவும் கேட்டிருந்தோம். நிச்சயமாக உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்த ஆட்சியர், உடனடியாகச் சிறுமிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு வீடு கிடைக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியரின் உத்தரவுப்படி இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி காலை வருவாய்த் துறை அதிகாரிகள் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போராம் கிராமத்திற்குச் சென்று சிறுமி சத்தியா மற்றும் மனநலம் பாதித்த அவரது தாயார் வசிக்கும் மண் குடிசைப் பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது மேய்ச்சல் நிலம் எனத் தெரியவந்தது. அதனால், அந்த இடத்தில் வீட்டுமனைப் பட்டா கொடுக்க முடியாது. எனவே, மாற்று இடத்தில் மனை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசு வீடு வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது.
மேலும் நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்து சிறுமி படித்த பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் வந்து மாணவிக்கு ஆறுதல் சொன்னதுடன் சிறு உதவிகளும் செய்தனர். திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நவீன கழிவறை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த நிகழ்வுகள் நடக்கும் போது 'மக்கள் பாதை' அமைப்பினர் சத்தியாவிற்கு துணையாக இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தது போலவே, அனைத்து அரசு உதவிகளும் கிடைத்து வருவதைப் பார்த்து சிறுமி சத்தியா மற்றும் 'மக்கள் பாதை' அமைப்பினர் ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவிகள் செய்ய முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர். நக்கீரன் சார்பிலும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வோம்.
திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமைகளில் வீட்டுமனைப் பட்டா சிறுமி சத்தியாவிற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பலரது உதவிகளும் வீடு கட்டும் பணிகளும் தொடங்கலாம்.