கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் பிரகாஷ் - சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகாஷ் லாரி டிரைவராக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது குழந்தையான அதிசயா என்பவர் அதே பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை விளையாடச் சென்ற அதிசயா காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை பிரகாஷ் புகார் அளித்தார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது கடைசியாக அவரது தாயாருடன் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிசயாவின் தாயாரை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்து வந்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் அதிசயா தந்தையான பிரகாஷ் என்பவரை அவரது மனைவி சத்யாவிடம் மகளைப் பற்றி விசாரணை செய்யச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சத்யா தனது கணவரின் காலில் விழுந்து மகளை நான் தான் அருகிலுள்ள விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிசயா உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பெற்ற தாயே தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சத்யா தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும், எதற்காக இந்த கொலை நடந்துள்ளது எனவும் பல்வேறு கோணங்களில் சத்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.