Skip to main content

விவசாயி கணவனை வெறுத்து உயிரை விட்ட ஸ்டெல்லா மேரி!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

2005-ல் முதலமைச்சராக இருந்தபோது உழவர் மாநாட்டைத் தொடங்கிவைத்து ஜெயலலிதா இப்படி பேசினார்.  

“என்னை பொறுத்தவரையில் நான் ஒரு விவசாயி. எந்தப் படிவத்திலும் உங்களது தொழில் என்ன என்று கேட்கப்படும் இடத்தில் விவசாயம் என்றே நான் குறிப்பிடுவேன். இதைச் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழில்தான் விவசாயம். இதைச் செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள்.  ‘கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும்’ என்றான் வங்கக் கவிஞன் தாகூர். அதுபோல ஆயிரமாயிரம் பயிர்ச் செடிகளைப் படைக்கும் விவசாயிகள் உண்மையில் தெய்வங்கள்.”  என்றார்.

 “Don't farm; Go to another job! ” Wife commits suicide


‘ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்! உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்!” என்று விவசாயி திரைப்படத்தில் பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்கூட தன்னை ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறார். சமீபத்திய சினிமாக்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஓஹோ என்று போற்றுகின்றன.

 

 “Don't farm; Go to another job! ” Wife commits suicide


‘மாறுவோம்.. மாற்றுவோம்!’ என்ற அமைப்பைத் தொடங்கி,  ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்துக்குச் செயல்வடிவம் தந்திருக்கும் நடிகர் ஆரி “உலகளவில் இந்தியா ஒரு விவசாய நாடு. உழவும் மருத்துவமும்தான் நமது ஆதித்தொழில். அனைவரும் விவசாயிகளாக மாறவேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விவசாயம் அறியாதோரையும் விவசாயியாக மாற்றும் முயற்சி இது.” என்கிறார்.

 

 “Don't farm; Go to another job! ” Wife commits suicide


அட, இவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படும் திருவள்ளுவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம்! ‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார். அதற்கு விளக்கம் -  உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்னால்தான் நிற்கிறது. அதனால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்பதாகும்.

உழவுத்தொழிலே முதன்மையானது என்பது நூற்றுக்கு நூறு  உண்மையென்றாலும், விவசாயத்தை நம்மில் பலரும் பார்க்கும் விதம் வேறாகத்தான் இருக்கிறது என்பதே சுடுகின்ற நிஜம்! அத்தகையோரில் ஒருவராகத்தான் இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. அதனால் ஏற்பட்ட விபரீதம் என்ன தெரியுமா?

 

 “Don't farm; Go to another job! ” Wife commits suicide

 

நர்சாகப் பணிபுரிந்த ஸ்டெல்லா மேரி, ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் மாடசாமியை 4 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பொறியியல் படித்திருந்தாலும், சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் மாடசாமி. மகன், மகள் என்று குடும்ப வாழ்க்கை நகர்ந்தபோதிலும்,  ‘படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறாரே!’ என்று கணவர் மீது கோபத்தை வெளிப்படுத்துபவராகவே இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. ஆடம்பரமாக வாழும் மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து,  ‘அரசு வேலைக்குச் செல்லலாமே..’ என்று கணவரிடம் பிரச்சனை செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ‘சரி.. வெளியூர் வேலைக்காவது செல்லுங்கள். இந்த விவசாயத் தொழில் வேண்டவே வேண்டாம்.’ என்று முரண்டுபிடித்திருக்கிறார். இது அவருக்கு தீராத பிரச்சனையாகிவிட, விரக்தியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது,   ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

உணவளித்து உலக மக்களை வாழ வைக்கிறது விவசாயம்! அதன் உன்னதத்தை உணராதவராகவே இருந்ததால், ஸ்டெல்லா மேரியின் உயிரே போய்விட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.