
காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
பிரியங்கா காந்தி அன்னை இந்திரா காந்தியைப் போலவே ஈர்ப்பு மிக்க ஆளுமையாகத் திகழ்பவர். கடந்த 2009 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவரது எளிமையும், எவரும் எளிதாக அணுகிப் பேசக்கூடிய தன்மையும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தற்போது அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள தொகுதிகளான அமேதி, ரேபரேலி ஆகியவை மட்டுமின்றி ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வென்ற பூல்பூர் தொகுதியும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில்தான் உள்ளது. பிரதமர் மோடி கடந்தமுறை வெற்றிபெற்ற வாரணாசி தொகுதியும் அதே பகுதியில்தான் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் இச்சூழலில், பிரியங்கா காந்தி உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் மேற்பார்வையாளராக பொறுப்பேற்றுத் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் நரேந்திர மோடி அவர்கள் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அங்கே சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது. போலி என்கவுண்டர்களில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுவது இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகம். ஆதித்யநாத் ஆட்சியில் இதுவரை 32 பேர் அப்படி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபோலவே லாக்-அப் படுகொலைகளும் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான 11 மாதங்களில் மட்டும் 144 பேர் போலிஸ் லாக்- அப்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆதித்யநாத்தின் சனாதன பயங்கரவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவு துவக்கமாக அமையும். பாஜகவின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்கும் நன்மருந்தாக பிரியங்கா காந்தி அவர்களின் அணுகுமுறை இருக்கும்.
சனாதனத்துக்கும் சனநாயகத்துக்கும் இடையிலான யுத்தமாக உருவெடுத்திருக்கும் 2019 பொதுத்தேர்தலில் சனநாயகத்தின் வெற்றியை நிலைநாட்டுவதற்கு பிரியங்கா காந்தி அவர்களின் அரசியல் பங்களிப்பு வழிவகுக்கும் என உறுதியாக நம்புகிறோம். அவருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.