தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் சம்பவம் மற்றும் செவிலியர்கள் பணி முடிந்து சீருடையுடன் தெருவில் வருவதை சில பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இது அனைத்து தரப்பினர் மத்தியில் வேதனை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலபேர் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா வேணுகோபால், சி. கொத்தங்குடி ஊராட்சியில் குடியிருக்கும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகளை மதித்து கௌரவிக்கும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பிச்சாவரம் கூட்டுறவு சங்க தலைவர் வேணுகோபால் மற்றும் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் வெங்கடசுந்தரம் உள்ளிட்ட ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் சாலையின் இருபுறங்களிலும் சமூக விலகலுடன் நின்று பணிக்குச் செல்லும் செவிலியர்களை பூத்தூவி வரவேற்று கைதட்டி உங்கள் சேவையை மதிக்கின்றோம், பணியை மதிக்கின்றோம் என கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது ஊராட்சி தலைவர் அம்சா வேணுகோபால் ஆரத்தி எடுத்து அனைவருக்கும் திலகமிட்டார். பின்னர் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு என்95 முக கவசம், சனிடைசர், கபசுரக் குடிநீர் பவுடர் ஆகியவற்றை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட செவிலியர்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் எங்கள் பணியை பாராட்டி தங்கள் கௌரவித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றுகூறி நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் செவிலியர்கள் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அனைவரும் நன்கு கைகளை கழுவ வேண்டும், அத்தியவாசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது முக கவசத்தை அணிந்து கொண்டு செல்ல வேண்டும், அப்போதும் சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.