சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி மற்றும் திருச்சியில் ஒரு கடை என பெரிய ஸ்தாபனமாக உள்ளது ரத்னா ஸ்டோர்ஸ். இந்த கடைகளில் உஸ்மான் ரோட்டிலுள்ள ரத்னா ஸ்டோர்ஸ் மட்டும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக நாம் ரங்கநாதன் தெருவிலுள்ள ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சீனிவாசனை தொடர்புகொண்டோம்.
அப்போது அவர், எங்களது குடும்பத்தின் கடுமையான உழைப்பால் வளர்ந்த நிறுவனம் சார் ரத்னா ஸ்டோர்ஸ். ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், புரசைவாக்கம் , வடபழனி,தாம்பரம், திருச்சி ஆகிய இடங்களில் ரத்னா ஸ்டார் சிறப்பாக இயங்கி வருகிறது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதோடு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுவருகிறோம்.
உஸ்மான் ரோட்டிலுள்ள கடையில் மட்டும் சில பிரச்சனைகள் இருந்தது. உஸ்மான் ரோட்டிலுள்ள 26 கடைகளை சி.எம்.டி ஏ மூடினார்கள். அதில் எங்கள் கடையும் மாட்டி மூன்று மாதங்கள் மூடப்பட்டது. இதனால் 90 நாட்கள் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கனமழையால் வெள்ளப்பெருக்கெடுத்து கடைக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை சரி செய்யவே மூன்று மாதங்கள் ஆனது. இப்படி அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டன. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். மீண்டும் உஸ்மான் ரோட்டிலுள்ள ரத்னா ஸ்டோர்ஸும் வழக்கம்போல் இயங்கி வாடிக்கையாளர் சேவையில் ஈடுபடும். யாரோ வேண்டுமென்றே சில வதந்திகளை பரப்புகின்றனர். அதனை வாடிக்கையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெளிவுபடுத்தினார்.