கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் தக்க வைத்ததின் மூலம் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை திமுக அதிக பெரும்பான்மையுடன் கைப்பற்றி திண்டுக்கல் மாநகரை திமுக வசமாக்கினார் அமைச்சர் ஐ.பெரியசாமி. மேலும், திண்டுக்கல் மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் செய்துவருகிறார்.
இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரைச் சொல்லி திமுக நிர்வாகிகள் சிலர் அப்பாவி மக்களுக்கு வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக கூறி பண வசூலில் இறங்கி இருப்பதாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி, கோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் சிலர் அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டு மனை வழங்க உள்ளதாக தெரிவித்து வசூல் செய்துவருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி காவலர் குடியிருப்பு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 600 நபர்களுக்கு 3 சென்ட் அளவுக்கு வீட்டு மனை தருவதாக கூறியுள்ளனர். மேலும், இதற்கு கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ரூ 2,000, ஆதார் கார்டு இரண்டு போட்டோ உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி மீதம் 50 ஆயிரம் ரூபாய் பின்னர் தர வேண்டும் என்று கூறி வசூலில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட பொறுப்பில் உள்ள கட்சியினர் சிலரிடம் கேட்ட போது, ‘திண்டுக்கல் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பே எங்க அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்துள்ளார். ஆனால், தற்பொழுது பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதாக அமைச்சர் எதுவும் சொல்லவில்லை. அமைச்சருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படி அமைச்சர் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட்டுவருபவர்கள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.