Skip to main content

காஷ்மீர் விவகாரத்தில் திமுக நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது! ஹெச்.ராஜா கண்டனம்!!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திமுக எதிர்ப்பது துரதிர்ஷடவசமானது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தர்மபுரியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சேலம் வழியாக செவ்வாய்க்கிழமை (செப். 24) சென்றார். இதற்கிடையே, சேலம் பெரியார் பல்கலையில் உள்ள தனது நண்பர் ஒருவரை காண்பதற்காக பல்கலைக்கு சென்றார். சிறிது நேரம் பல்கலை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், பின்னர் தர்மபுரிக்குக் கிளம்பிச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்ததாவது:

 

h raja


தமிழக பாஜக தலைவர் யார்? என்று முடிவு செய்ய வேண்டியது, கட்சியின் அகில இந்திய தலைமையின் பொறுப்பு. கட்சித் தலைமை யாரை தலைவராக அறிவித்தாலும் அனைத்து பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்பது குறித்து கேட்கிறீர்கள். 1978ம் ஆண்டில் காரைக்குடியில் 4வது வார்டு தலைவராக என்னுடைய அரசியல் பணியைத் தொடங்கினேன். இப்போது அகில இந்திய செயலாளர் வரைக்கும் வந்திருக்கிறேன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன்.


நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். இரண்டிலும் வெற்றி பெறுவோம்.


'ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம்' என்கிற தலைப்பில் அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 ஏ, 35 ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கு, இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் போராட்டங்கள் கிடையாது. ஏனெனில், அங்கெல்லாம் கொஞ்சம் தேச பக்தி அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் 370 ஏ, 35 ஏ ஷரத்துகள் என்ன சொல்கிறது என்று தெரியாமலேயே, 'இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு' என்று கோஷம் போடுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. 

திமுகவாக இருக்கட்டும் அல்லது அதனுடைய இலவச இணைப்புகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் சமூகநீதியைப் பற்றி பேசுகின்றன. இதுநாள் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வரை, பட்டியல் சமூக மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அரசியல் சட்டப்பிரிவு 370 ஏ, 35 ஏ ரத்து செய்யப்பட்ட பிறகுதான் அங்குள்ள பட்டியல் சாதியினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. 

அதேபோல, காஷ்மீரில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 2 சதவீதம மட்டும் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது மற்ற மாநிலங்கள் போல 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதை எதிர்க்கிற திமுக சமூக விரோத தீய சக்தியா இல்லையா? அதை எதிர்க்கிற வைகோ, திருமாவளவன் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் எதிரிகள்தானே? இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்