திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்கக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த கலைஞர்100 கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய அன்றைய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்பு குறித்து சில அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தார்.
குஷ்பு குறித்து சர்ச்சை பேச்சு; சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்
இதற்கு குஷ்பு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் கோவையில் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மிகவும் தரக்குறைவான விதத்தில் பேசி இருந்தார். வானதி ஸ்ரீனிவாசனின் அந்த பேச்சில், ‘திமுக கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அவர்கள் ஒரு வீட்டில் இருக்கமாட்டார்கள். திமுகவில் இதை ஒரு பண்பாடாகவே செய்து வருகிறார்கள்’ என்று மிக மோசமாகப் பேசி இருந்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றிய இந்த ஆதாரமற்ற மலினமான பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ளன.
‘ஒரு கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் சாதனைகளைப் பற்றி பேச வேண்டும். ஆனால், அந்த கட்சிக்கு என்று எந்த சாதனைகளும் இல்லை என்பதால் அந்த கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூட அடுத்த கட்சியைப் பற்றிய அவதூறை பேச வேண்டிய நிலைமை ஏற்படுகிறது’ என்று பாஜக வானதி ஸ்ரீனிவாசனுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.
அதேசமயம் திமுக ஆதரவாளர் ஒருவர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வானதி ஸ்ரீனிவாசனுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “எல்லாரையும் உங்களைப் போல் நினைத்துவிடக்கூடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக நீங்கள் என்ன போராட்டத்தை நடத்தினீர்கள். உங்கள் கட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் முதல்வரை அணுகலாம். அவர் கண்டிப்பாக உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார். அதை விட்டுவிட்டு எங்கள் திமுக சகோதரர்கள் குறித்து இப்படி அவதூறு பரப்பினால் நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது திமுக; ஜல்சா கட்சி கிடையாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.