அரவக்குறிச்சி தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும், காங்கிரஸ் ஜோதிமணியும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நான்கு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறார்கள். வேட்புமனு தாக்கலின் போது காட்டின அதிரடியை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள் ஆளும்கட்சியினர் .
குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் எப்படி செந்தில்பாலாஜியை சிக்கவைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். இதனால் செந்தில்பாலாஜியை எதிர்த்து 10 அமைச்சர் கொண்ட பெரும் படையே களத்தில் இறக்கி விட தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் ஆளும் கட்சியின் சார்பில் கரூர் அதிமுக அலுலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் கரூர் தொகுதியில் பல பேர் சரியாக வேலை செய்யவில்லை. வரப்போகிற அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் அதே மாதிரி நடந்தீர்கள் என்றால் கட்சியில் இருந்து தூக்கி எறிந்து விடுவேன். இதுகுறித்து நான் முதல்வர்கிட்ட பேசிட்டேன். அவர் லிஸ்ட் மட்டும் ரெடி பண்ணுங்கன்னு சொல்லிட்டார். மத்த விசயத்தை நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார்.
நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் சின்னம் வரைந்ததில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. மட்டமான பெயிண்டை பயன்படுத்தி இருக்கீங்க. இடைத்தேர்தலில் நல்லா தெரிகிற மாதிரி படம் இருக்கணும். திமுக கட்சிக்காரன் வீட்டை தவிர மற்ற அனைத்து வீடுகளிலும் இரட்டை இலை சின்னம் வரைங்க. சின்னம் வரைய கூடாதுன்னு யாரும் பிரச்சனை பண்ணினா பூத் சிலிப்புடன் வைட்டமின் ’ப’ சேர்த்து கொடுங்க என்று பொறிந்து தள்ளினார்.
தம்பித்துரை சிபாரிசில் சீட்டு வாங்கிய செந்தில்நாதன் இடைத்தேர்தல் களத்தில் நடக்கும் உள்ளடி வேலைகளை அப்படியே அமைச்சருக்கு அப்டேட் செய்கிறார். அதை வைத்தே அமைச்சரும் கட்சியினருக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.