Skip to main content

பல உயிர்களைப் பலி கொடுத்து போராடிப் பெற்றது இலவச மின்சாரம்... கை வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: ஈஸ்வரன் கண்டனம்

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
E.R.Eswaran



விவசாயிகளின் இலவச மின்சாரத்தில் கை வைத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மாநில உரிமைகளை நீர்த்துப்போக செய்யும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக வரைவு மசோதாவை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பது மாநில உரிமைகளைப் பறிப்பதற்கான முதல்படி. உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட மசோதா இது. அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டிய ஒன்று. 
 

 

விவசாயத்திற்கான தண்ணீரைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. சில இடங்களில் வாய்க்கால்களை வெட்டி வயல்களுக்கு தண்ணீரை அரசாங்கம் கொடுக்கிறது. மற்ற இடங்களில் விவசாயிகள் கிணறு தோண்டி சொந்த செலவில் மோட்டார் பம்ப் வைக்கிறார்கள். தேவையான மின்சாரத்தை அரசாங்கம் கொடுக்கிறது. அப்போதுதான் அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்திக்கான செலவு சமமாக இருக்கும். 
 

வாய்க்கால் விவசாயம் மற்றும் கிணற்று விவசாயம் மூலம் உற்பத்தியாகிற விளைபொருட்களுக்கும் ஒரே விற்பனை விலை தான். வாய்க்கால் அமைத்துக்கொடுக்க முடியாத நிலங்களுக்கு அரசாங்கம் இலவசமாக மின்சாரம் கொடுக்கிறது. இலவச மின்சாரம் இல்லையென்றால் விவசாயம் செய்ய முடியாது. 
 

பல உயிர்களைப் பலி கொடுத்து அரசாங்கத்தைப் புரிய வைத்து போராடிப் பெற்றது இலவச மின்சாரம். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் பல தற்கொலைகளை தமிழகம் சந்திக்கும். மாநில அரசு ஏமாந்து விடக்கூடாது. இலவச மின்சாரத்தை காப்பாற்றிக்கொள்ள விவசாயிகளோடு இணைந்து எத்தகைய போராட்டத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். விவசாய இணைப்புகளுக்கு மின்மீட்டர் பொறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கரோனாவோடு நாடே போராடிக் கொண்டிருக்கும் போது மனிதாபிமானமில்லாமல் மின்சார வரைவு மசோதாவை அனுப்பியிருப்பதை வேதனையோடு கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்