திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியான அதிமுக பிரமுகர்கள் திமுகவினரை தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள் என மிரட்டத் தொடங்கியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கையின் போது அதிகாரிகள் நாங்க சொல்வதைத்தான் கேட்பாங்க, நாங்க வெற்றி பெற்றோம்ன்னு அறிவிக்கவச்சிடுவோம். அதனால் இப்பவே பணத்தை வாங்கிக்கிட்டு அமைதியாக போய்விடுங்கள் என பேசியதாக திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் வெளிப்படையாக அதிமுகவுக்கு ஆதரவாக ஒரு அதிகாரி செயல்பட்டதையும், செய்யார், வெம்பாக்கம் ஒன்றியங்களில் அதிகாரிகளை ஆளும்கட்சியான அதிமுகவினர் மிரட்டி திமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி தரவைப்பதையும், தங்களுக்கு சாதகமாக செயல் பட வேண்டும் எனச்சொல்வதையெல்லாம் ஆவணங்களாக திமுக திரட்டி வருகின்றனர்.
இதுப்பற்றி ஜனவரி 6ஆம் தேதி கூடும் சட்டசபை கூட்டத்திலேயே கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அதோடு, உச்சநீதிமன்ற நெருக்கடியால் தான் இந்த தேர்தலை மாநில அரசு நடத்துகிறது. இதில் எத்தனை அதிகார துஷ்பிரயோகம் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ஆவணங்களை திரட்டுகின்றனர்.
பதட்டமான வாக்குசாவடிகளில் கேமரா பொருத்த வேண்டும் என்கிற வேண்டுக்கோளை திமுக நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வைத்துள்ளனர். அதேபோல் தேர்தல் நாளன்று வாக்குசாவடிக்குள் வன்முறையில், பிரச்சனையில் ஆளும்கட்சியான அதிமுக ஈடுப்பட்டால் அதனை திமுகவினர் வீடியோவாக பதிவு செய்யவும் கட்சியினருக்கு ஆலோசனை கூறியுள்ளது.